வானம் என்ற வளர்பரப்பில் வண்ண
தானம் செய்கிறான் தனிஒருவன் ! அந்த
மேகப் பஞ்சின் மேனிக் குள்ளே
காகம் குருவி கருநாகம் யானை
சிங்கம் புலிகரடி செய்கிற மாயச்
சங்கதி காட்டுகிறான் ! சட்டென நீலம்
சிகப்பு வெளிர்மஞ்சள் சிதறிய பச்சை
முகப்பு எதிலும் மூடும்
கருமேக
அறங்கள் செழிக்க அடைமழையாய்ப் பட்டுத்
தெறிக்கும் மின்னலுடன் தெய்வ தரிசனம்
குறிக்கின்றான் ! சூரியக் குஞ்சும் பிஞ்சு
நிலாவும் ஓடித் திரிந்து தன்வீதி
உலாவர மகிழ்கின்றான் ! உயிரின் முடிச்சாய்
மின்னிடும் நட்சத்திர மிச்சம் வீசுகிறான் !
என்னிடம் மட்டும் இசைத்துக் காட்ட
மெல்லிய காற்றை மேல்தடவி நல்ல
பைரவி ராகத்தில் பாடுகிறான் ! அவனென்
கைகளில் கிடைக்கக் காண வில்லை !
பொய்களைப் போலப் புதுப்புது வண்ணத்தில்
செய்கிறான் மாயங்கள் ! சிரிக்கிறான் பாருங்கள் !
"அற்புத ஆற்றலை அளப்ப தற்கு
விற்பனன் அல்லநீ என்கின்றான் ! போடா
உன்னை எப்படியும் உள்வைத் திடுவேன் !
தன்னை அறிந்தபின் அடநீ எதற்கு ?
- (24.05.2015 3.35 am)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக