(அகவற்பா)
"எழுத
நினைத்த எனக்கு இனிய
பொழுதை அளித்துப்
பொலியும் "யோகியாரைப்"
போற்றிப் பணிகின்றேன்; பொல்லாப் புகழுக்கு
நாற்றிட மாட்டேன்; நலம்தரும் நட்புக்கு (4)
நெஞ்சுக்குள் பஞ்சிடுவேன்; நீதி நெறிதன்னைப்
பிஞ்சுமுதல் கற்றதனால் பெரியவர், சான்றோர்
அனைவரின் பக்கத்தில் அன்றாடம் கற்ற
வினைப்பயனை நன்றாய் விளையாட்டாய் வித்தகமாய்ச் (8)
செய்கின்றேன்; சூதில்லை, தீய வினையில்லை;
பெய்யும் மழைபோலப் பேசியே நன்றான
செய்கையினால் நல்நட்பைப் பெற்றவனாய் வாழ்கின்றேன்;
கையேந்தும் எண்ணம் கடேசிவரை இல்லாமல் (12)
மெய்யாய் இருந்து இருப்பதிலே இல்லார்க்குக்
கைநிறையக் கொடுக்கவே கற்பூரம் ஏற்றுகிறேன்!
ஊரும் உறவுமே ஒற்றுமையாய் வாழ்ந்திடவே
வேரில்நல் லன்பை வியர்வையாய்க் கொட்டுகிறேன்! (16)
கண்ணுக்குள் எப்போதும் காருண்யம் வேண்டுமென
எண்ணுக்குள் சிக்காத "என்குருதாள்" வேண்டுகிறேன்!
பெண்ணுக்கும் ஆணுக்கும் பேதமிலா அன்பென்றும்
மண்ணுக்குள் நட்ட மணிவிதை மாமரமாய் (20)
ஓங்கி வளர்வதுபோல் ஒற்றுமையாய் வாழட்டும்!
தங்கிப் பிடிப்பதற்கும்,, தங்கம்போல்
வாழ்த்துதற்கும்
என்மனது இன்பத்தில் என்றுமே சுற்றட்டும்!
பொன்னென்றும் கோடிப் பொருளென்றும் நாடாமல் (24)
என்தேச மக்களது ஏற்றத்தை என்றென்றும்
சின்னஎன் னுள்ளம் சிறப்பாகப் பாடட்டும்!
பூமியின் செல்வம், பொங்கும் நதிவெள்ளம்
போதிய திட்டத்தால் பூப்போல் மணக்கட்டும்! (28)
சந்தனக் கட்டையாய் சார்ந்துள்ள நல்லவர்"தாள்"
சொந்தமாய்த் தொட்டுச் சொடக்கிடவே எண்ணுகிறேன்;
கந்தகமாய் மூத்தோரைக்
கத்தியே பேசிடினும்
அந்தநம் மூத்தோரின்
அன்புக்கே ஏங்கிடுவேன்; (32)
காத்தோர் இளமைநம் காலமுத லானதினால்
மூத்தோ ருடனிருக்க முப்போதும் எண்ணி
முதியோரும் சின்னக் குழந்தைகளும் கூடி
மதிகுளிரும் இல்லமாய் வாழ்ந்து வருகின்றேன்; (36)
தப்படி வைத்துத் தவறுக்குள் வீழ்ந்தன்று
எப்படியோ செல்ல இருந்தவனைக் கண்ணசைவில்
இப்படிவா என்று எனையிழுத்த நற்குருவை
எப்படிநான் விட்டிடுவேன்;
எனக்குப தேசமும்
செய்து, வழியில் விழிவைத்
தருளுமே (41)
செய்து களிக்கின்றார்; சிந்தையில் அந்த
குருவே இருந்தெனைக் கூட்டிச்செல் கின்றார்;
அருமையாம் பாதையில் ஆலவட்டம் ஏந்திப்
பெருமையாய்ச் செல்கிற
பேறு
கருவிலே அம்மா களித்த துளியே ?" (46)
*******************
(சந்தவசந்தம் வலைத்தளம் கவியரங்கத்திற்க்காக எழுதப்பட்டது)