பொருனை

பொருனை

சனி, 8 ஆகஸ்ட், 2015

"என் அப்பா"

1  ஆற்றில் குளிக்க அழைத்துப்போய் நீச்சலுடன்
     காற்றை அடக்கிநற் காயத்ரி- நாற்றை
     மனதில் பதிந்திட வைத்தயென் அப்பா
     எனதுள் உறையும் உயிர்.

2.  சட்டைப்பைக் குள்ளே சலசலக்கும் காசெல்லாம்
      சட்டெனக் காணாது சாய்ந்தந்த - விட்டத்தைப்
      பார்ப்பார்எடுத்த பயல்நான் அவர்மடியில்
      நார்போல் கிடப்பேன் நரி.

3.  கடுஞ்சொல் வசையாகக்  கண்டிக்க மாட்டார்!
      படும்கை தடவி, பதியும் -  நெடிய
      பகைமறக்கப்  பாசத்தால் பண்பெனும்   நல்ல
      நகைபூட்டும் அப்பா நண் பன்.

4.  அப்பாவின் சம்பளநாள் அக்காவுக் கும்எனக்கும் 
      எப்பவுமே கொண்டாட்டம்அந்நாளை - இப்போதும்
      எண்ணினால்  அல்வாபோல் என்னுள் இனிப்பதனால்
      கண்ணின் மணிஅப்பா காண்.

5. சாப்பாட்டு வேளை சரிசமமாய் உட்கார்ந்து
     கூப்பாடு போடாமல் கொஞ்சம்நீ - ஆக்காட்டு,
     என்றே பரிவாக இன்னமுது ஊட்டிவிட்ட
      என் அப்பா என்றும் இறை.
     

     

எங்கேபோய்க்கொண்டிருக்கிறேன்

            (அகவற்பா)

"எழுத நினைத்த எனக்கு இனிய
பொழுதை அளித்துப் பொலியும் "யோகியாரைப்"
போற்றிப் பணிகின்றேன்; பொல்லாப் புகழுக்கு
நாற்றிட மாட்டேன்நலம்தரும் நட்புக்கு                          (4)

நெஞ்சுக்குள் பஞ்சிடுவேன்; நீதி நெறிதன்னைப்
பிஞ்சுமுதல் கற்றதனால் பெரியவர், சான்றோர்
அனைவரின் பக்கத்தில் அன்றாடம் கற்ற
வினைப்பயனை நன்றாய் விளையாட்டாய் வித்தகமாய்ச்    (8)

செய்கின்றேன்; சூதில்லை, தீய வினையில்லை;
பெய்யும் மழைபோலப் பேசியே நன்றான
செய்கையினால் நல்நட்பைப் பெற்றவனாய் வாழ்கின்றேன்
கையேந்தும் எண்ணம் கடேசிவரை இல்லாமல்                           (12)

மெய்யாய் இருந்து இருப்பதிலே இல்லார்க்குக்
கைநிறையக் கொடுக்கவே கற்பூரம் ஏற்றுகிறேன்!
ஊரும் உறவுமே ஒற்றுமையாய் வாழ்ந்திடவே
வேரில்நல் லன்பை வியர்வையாய்க் கொட்டுகிறேன்!          (16)

கண்ணுக்குள் எப்போதும் காருண்யம் வேண்டுமென
எண்ணுக்குள் சிக்காத "என்குருதாள்" வேண்டுகிறேன்!
பெண்ணுக்கும் ஆணுக்கும் பேதமிலா அன்பென்றும்
மண்ணுக்குள் நட்ட மணிவிதை மாமரமாய்                                (20)

ஓங்கி வளர்வதுபோல் ஒற்றுமையாய் வாழட்டும்!
தங்கிப் பிடிப்பதற்கும்,,  தங்கம்போல் வாழ்த்துதற்கும் 
என்மனது இன்பத்தில் என்றுமே சுற்றட்டும்!     
பொன்னென்றும் கோடிப் பொருளென்றும் நாடாமல்  (24)

என்தேச மக்களது ஏற்றத்தை என்றென்றும்
சின்னஎன் னுள்ளம் சிறப்பாகப் பாடட்டும்!                 
பூமியின் செல்வம், பொங்கும் நதிவெள்ளம்
போதிய திட்டத்தால் பூப்போல் மணக்கட்டும்!                 (28)

சந்தனக் கட்டையாய் சார்ந்துள்ள நல்லவர்"தாள்"
சொந்தமாய்த் தொட்டுச் சொடக்கிடவே எண்ணுகிறேன்;  
கந்தகமாய் மூத்தோரைக் கத்தியே பேசிடினும்
அந்தநம் மூத்தோரின் அன்புக்கே ஏங்கிடுவேன்;         (32)

காத்தோர் இளமைநம் காலமுத லானதினால்
மூத்தோ ருடனிருக்க முப்போதும் எண்ணி
முதியோரும் சின்னக் குழந்தைகளும் கூடி
மதிகுளிரும் இல்லமாய் வாழ்ந்து வருகின்றேன்;     (36)

தப்படி வைத்துத் தவறுக்குள் வீழ்ந்தன்று
எப்படியோ செல்ல இருந்தவனைக் கண்ணசைவில்
இப்படிவா என்று எனையிழுத்த நற்குருவை
எப்படிநான் விட்டிடுவேன்; எனக்குப தேசமும்
செய்து, வழியில் விழிவைத் தருளுமே                                  (41)

செய்து களிக்கின்றார்; சிந்தையில் அந்த
குருவே இருந்தெனைக் கூட்டிச்செல் கின்றார்;
அருமையாம் பாதையில் ஆலவட்டம் ஏந்திப்
பெருமையாய்ச் செல்கிற பேறு
கருவிலே அம்மா களித்த துளியே ?"                                     (46)
                                *******************

(சந்தவசந்தம் வலைத்தளம் கவியரங்கத்திற்க்காக எழுதப்பட்டது)

உள்ளொளி பெருக்கு

"ஒளியையே பார்த்துப் பார்த்து
  ஒளிபெறும் கண்கள் ; சாந்திக்
களியையே உணர்ந்து நிற்கும்
 கனிவுடை நெஞ்சம் ; கூர்த்த
உளியையே நட்ப்பாய்க் கொண்டு 
  உயிர்பெரும் சிறப்பம் ;  மோன
வெளியையே விரும்பி ஏற்கும்
 வினையிலா ஞான வாழ்க்கை;            (4)

இனியதைக் கொண்டு கொண்டே
 இருப்பதில் நிறையும் எண்ணம்
இனிவரும் காலம் எல்லாம்
 இன்பமே என்று சொல்லும் !
அனைவரும் ஒன்று கூடி
 அடுத்தவர் நலமே போற்றி
தினையொரு பொழுதி ருந்தால்
 தீவினை மாய்ந்து போமே!"                (8)

              ( 14.10.2014   8.30 am)


உத்தம இல்லன்

ஓடுது ஓடுது மாட்டுவண்டி - எந்த
ஊரினைத் தேடியே போகுதடி
காடது மேடது தேடியுடன் - என்
காளையைக் கண்டிடப் போகுதடி ! .....(ஓடுது ஓடுது)...     (1)

அணையிலே நீரிலே அள்ளிவைத்து - என்னை
அணைத்தவர் நெஞ்சிலே புள்ளிவைத்து
துணையென நீயெனச் சொன்னபோது - என்
துணிவினை மெச்சியே பொட்டுவைத்தார் ! .....(ஓடுது ஓடுது)...  (2)

வாழ்த்திட தேவதை வேண்டுமென்றேன் - உன்
மனத்திடம் ஓங்கிய சக்தியென்றார் !
ஊழ்வினை மந்திர(ம்) ஏதுமில்லை - நெஞ்சில்
உத்தமக் காதலே ஒட்டுமென்றார் !.....(ஓடுது ஓடுது)...   (3)

பாரதி பாட்டினைப் பண்ணுடனே - நான்
பாடிய போதிலே கண்பனித்தார் !
ஏழடி வைத்திடக் கால்பிடித்தார் - நான் 
இல்லற உத்தமன் கைபிடித்தேன் ! .....(ஓடுது ஓடுது)...  (4)


                                 (03.04.2015)

"ஆனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ விதுசேகர பாரதீ"

"இதுகாணக் கிடைக்காத காட்சி ! இளங்கதிர்க் குளிர்போன்ற தோற்றம் !
அதுஆன்ம நிர்வாணக் கோலம் ! அழகுடை  ஜோதிஸ்வ ரூபம் !
புதுப்பூவின் மகரந்த வாசம் பொழிகிற உரைதனிலே வீசும் !
"விதுசேக ரபாரதீ"யின் பாதம்  வினைகளை விரட்டுகிற வேதம்!        (1)

(அறுசீர் விருத்தம் வாய்பாடு :காய் , காய், மா , விளம் , காய் , மா )

கற்கவே விரும்புகிற உள்ளம் , கற்றதையே பகிர்கின்ற பண்பு !
உற்றதோர் குருநிழலாய்க் கொண்டு ஊறிவரும் குருவம்ச ஞானம் !
பற்றினைத்  தீயிட்ட பார்வை ! பரமனையே மனம்வைத்த சுத்தர் !
நெற்றியில் விழிவைத்த ஈசன் "விதுசேக ரபாரதீ"யாய் வந்தார்!"   (2)

(அறுசீர் விருத்தம் வாய்பாடு :விளம் , காய், மா , காய் , காய் , மா )

(தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 37வது பீடாதிபதியை "ஸ்ரீவிதுசேகர பாரதீ" என்று யோகப் பட்டம் தந்து தமது சிஷ்யராக ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசன்னிதானம் அவர்கள் 23.01.2015  வெள்ளிக் கிழமை அன்று தமது உத்திராதிகாரியாக சிஷ்யஸ்வீகாரம் செய்தார்கள்.)